போராட்டக்காரர்களை தூக்கிலிட்டால்....ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ஈரான் போராட்டக்காரர்களை தூக்கிலிட்டால், அதற்கு எதிராக அமெரிக்கா மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (13) சிபிஎஸ் செய்தி ஊடகத்துக்கு பேட்டியளித்தபோதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈரான் அரசின் கொடூரமான ஒடுக்குமுறையில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்து வருவதை இதன்போது சுட்டிக்காட்டிய ட்ரம்ப், ஈரான் நாட்டின் சர்வாதிகாரத்தை வன்மையாக கண்டித்திருந்தார்.
“போராட்டக்காரர்கள் தூக்கிலிடப்பட்டால், அதற்குப் பிறகு நடக்கப்போகும் சில விடயங்களை நிச்சயமாக நீங்கள் பார்ப்பீர்கள்” என்றும் ட்ரம்ப் ஈரான் அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
ஈரானில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றதால் கைது செய்யப்பட்ட எர்பான் (Erfan Soltani) என்ற இளைஞனுக்கு இன்று (14) மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதேவேளை ட்ரம்ப் தனது பிரத்தியேக சமூக ஊடகப் பதிவொன்றில் “உதவி வந்துகொண்டிருக்கிறது என ஈரான் மக்களை நோக்கிக் குறிப்பிட்டுள்ளமை முக்கிய விடயமாக பார்க்கபப்டுகின்றது.