சாலை நடுவே கருப்பின இளைஞருக்கு ஏற்பட்ட கொடூரம்: ஸ்தம்பித்த பல நகரங்கள்
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் கருப்பின இளைஞர் ஒருவர் ஐந்து பொலிஸ் அதிகாரிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவத்தில், முக்கிய நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டென்னசி மாகாணத்தில் மெம்பிஸ் நகரில் குற்றச்செயல்களை தடுக்கும் பொலிஸ் அதிகாரிகளில் ஐவர் மீது 29 வயது நபரை படுகொலை செய்த விவகாரத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த ஐவருமே போக்குவரத்து நிறுத்தத்தில் 29 வயதான டயர் நிக்கோலஸ் என்பவரை தடுத்து நிறுத்தி கொடூரமாக தாக்கியவர்கள். குற்றுயிராக கிடந்தவரை 20 நிமிடங்கள் தாமதமாக மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
இதனையடுத்து மூன்று நாட்கள் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த டயர் நிக்கோலஸ் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்த தகவல வெளியானதும் மெம்பிஸ் நகரில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் பொலிசாருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
சனிக்கிழமை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நியூயார்க் நகரில் சுமார் 100 பேர் ஒன்று சேர்ந்து வாஷிங்டன் சதுக்கம் முதல் டைம் சதுக்கம் வரை ஊர்வலம் சென்றுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், நீதி இல்லையேல், அமைதி இல்லை என முழக்கமிட்டுள்ளனர். பொலிசார் ஐவரும் திட்டமிட்டே தாக்குதலை முன்னெடுத்ததாகவும், இது படுகொலை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய ஐந்து அதிகாரிகள் மீதும் இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதுடன், கொடூரமாக தாக்குதல், கடத்தல், உத்தியோகத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் உத்தியோகத்தால் ஒடுக்குமுறை உள்ளிட்ட பிரிவுகளிலும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
கட்டுப்பாடற்ற பயணம் என்பதாலையே, டயர் நிக்கோலஸ் என்பவரின் வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக பொலிசார் முதலில் கூறி வந்தாலும், அந்த பகுதி மட்டும் காணொளியாக பதிவாகவில்லை என கூறப்படுகிறது.
மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து அதிகாரிகளும் கருப்பினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.