கனடாவில் இளம்பெண்ணை பலமாக தரையில் தள்ளிய பொலிசாரால் சர்ச்சை...
கனேடிய நகரம் ஒன்றில் நடந்துசென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை பொலிசார் ஒருவர் கீழே தள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த பொலிசாரின் செயல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகர் எட்மண்டனில், பொலிசார் ஒருவர், நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை பயங்கரமாக கீழே தள்ளுவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்தப் பெண் பொலிஸ் கார் ஒன்றின் அருகில் நடந்துசென்றுகொண்டிருக்க, பின்னால் வந்த பொலிசார் அந்த பெண்ணிடம் ஏதோ சொல்கிறார்.
அதைக் கேட்டு அந்தப் பெண் திரும்ப, அவரைப் பிடித்து வேகமாக தரையில் தள்ளுகிறார் அந்த பொலிசார். அந்த பெண் பலமாக தரையில் விழுந்ததுடன், தரையில் உருண்டும் செல்கிறார்.
பொலிசாரின் இந்த செயல் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், பொலிஸ் தரப்பில் அந்த பொலிசாரின் செயலுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண் கையில் கத்தி வைத்திருந்ததாகவும், ஒருவரது புகாரின் பேரில் அந்தப் பெண்ணைக் கைது செய்யச் சென்ற பொலிசாரிடம், அவர் முரட்டுத்தனமான பெண், ஆயுதம் வைத்திருக்கிறார் என எச்சரிக்கப்பட்டதாகவும், அதனால்தான் அந்த பொலிசார் அவரைக் கீழே தள்ளியதாகவும் பொலிஸ் தரப்புக் கூறுகிறது.
ஆனால், அந்தப் பெண்ணை தனக்குத் தெரியும் என்று கூறும், வீடற்றவர்கள் ஆதரவு அமைப்பு ஒன்றைச் சேர்ந்த Judith Gale என்பவர், பாதிக்கப்பட்ட பெண் வீடற்றவர் என்றும், எப்படி இருந்தாலும், யாரையுமே அப்படி நடத்தக்கூடாது என்றும் கூறுகிறார்.
அதேபோல, நிபுணர்கள் சிலரும் அந்தப் பெண் மீதான தாக்குதல் முறையற்றது. அவர் ஆயுதம் வைத்திருந்தால் கூட அவரிடம் பேசி அவரைக் கைது செய்திருக்கமுடியும் என்கிறார்கள்.
அதே நேரத்தில், நீதித்துறை சார் நிபுணர் ஒருவரோ, அந்த பொலிசார் செய்தது தவறல்ல, அவர் டேஸர் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக , தள்ளிதான் விட்டார். அந்த பெண்ணால் வன்முறை ஏற்படும் என தெரியவந்தபின், அவரை அப்படியே விடமுடியாது என்கிறார்.