விளாடிமிர் புடினின் காதலியும் தப்ப முடியாது: கனடா அமைச்சர் வெளிப்படை
முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனையும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் காதலியுமான அலினா கபேவாவும் தடை விதிப்பில் இருந்து தப்ப முடியாது என கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உட்பட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள், பயணத் தடைகள் உள்ளிட்டவை விதித்துள்ளதுடன், இதுவரை ரஷ்யாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களையும் ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டன.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் பொருளாதாரத் தடை விதிக்கப்படக்கூடிய தனிநபர்களின் வரைவு பட்டியலில் கபேவாவின் பெயர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, கபேவா தொடர்பில் கேள்வி எழுப்பிய நிலையில், வெள்ளைமாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், ரஷ்ய தொடர்பில் எவரும் தடைகளில் இருந்து தப்ப முடியாது என குறிப்பிட்டிருந்தார்.
புடின் தொடர்பில் உள்ள அனைவர் மீதும் தடைகள் விதிப்பது படிப்படியாக நிறைவேற்றப்படும் என கனடாவின் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், புடின் தொடர்பில் பொருளாதாரத் தடைகள் விதிப்பது தொடர்பான புதிய பட்டியல் ஒன்றையும் விரைவில் வெளியிட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு கனடா ஆதரவளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஏற்கனவே புடினின் மகள்கள் இருவர் மீது தடைகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.