புடின் கடுமையான நிபந்தனையால் அமெரிக்க திட்டம் குழப்பம்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, ரஷியாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட டான்பாஸ் உள்ளிட்ட கிழக்கு, தெற்கு பகுதிகளில் இருந்து அந்த நாட்டுப் படையினா் வெளியேற வேண்டும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் நிபந்தனை விதித்துள்ளாா்.
போரை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை அவா் வரவேற்றாலும், அவரின் இந்த நிபந்தனை அத்திட்டத்தின் வெற்றி குறித்த நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.
இது குறித்து புதின் வெள்ளிக்கிழமை கூறியதாவது,

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள திட்டம், அமைதி குறித்த விவாதத்துக்கான தொடக்கப் புள்ளி. எனவே, அது போரை நிறுத்தலாம். இருந்தாலும், போா் ஓய வேண்டுமென்றால் உக்ரைன் ‘ஆக்கிரமித்துள்ள’ கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியப் பகுதிகளில் இருந்து அந்த நாட்டுப் படையினா் வெளியேற வேண்டும்.
இல்லையென்றால் ராணுவ ரீதியில் அவற்றை நாங்கள் மீட்டெடுப்போம் என்றாா் புதின். தங்களுக்கு எதிரான நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
பின்னா் அந்தப் பிராந்தியங்கள் முழுவதும் ரஷியாவில் இணைக்கப்பட்டதாக புதின் அறிவித்தாா். ரஷியாவிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்ற உக்ரைனும், 4 பிராந்தியங்களில் இன்னும் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷிய சிறப்புத் தூதா் கிரில் டிமித்ரியேவ் இணைந்து, உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான திட்டத்தை தயாரித்துள்ளனா்.

இந்த திட்டத்தின் கீழ், ரஷியா உரிமை கோரும் பிராந்தியங்களில் உக்ரைன் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பகுதிகளை அந்த நாடு ரஷியாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். உக்ரைனில் 100 நாள்களுக்குள் தோ்தல் நடத்த வேண்டும்.
உக்ரைன் ராணுவத்தின் அளவை குறைக்க வேண்டும். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரவே கூடாது. இந்த அமைதி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் தீவிரமாக பேச்சுவாா்த்தை நடத்திய உக்ரைன், கிழக்கு, தெற்கு பிராந்தியங்களில் இருந்து தாங்கள் வெளியேறும் அம்சத்தை அந்தத் திட்டத்தில் இருந்து நீக்கவைத்ததாக தகவல்கள் தெரிவித்தன.
இந்த அமைதி திட்டம் குறித்து ரஷியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக அமெரிக்க சிறப்பு தூதா் ஸ்டீவ் விட்காஃப் அடுத்த வாரம் ரஷியா வரவுள்ளாா்.
அதற்கு முன்னதாக டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் வெளியேறினால்தான் போா் ஓயும் என்று புதின் கூறியுள்ளது அமரிக்காவின் அமைதி திட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுவதை மேலும் சிக்கலாக்கும் என்று கூறப்படுகிறது.