ஊழியர்களின் சீருடை விதிகளை மாத்தும் காண்டாஸ் விமான நிறுவனம்; ஆண்களும் மேக் அப் போடலாம்
அவுஸ்திரேலியா தேசிய விமான சேவை நிறுவனமான காண்டாஸ் விமான நிறுவனம் , தனது ஊழியர்களுக்கான பாலின அடிப்படையிலான சீருடை விதிகளை நீக்கியுள்ளது.
இதன்படி, விமானச் சிப்பந்திகளான பெண்கள் குதி உயர்ந்த பாதணிகளை அணியாமல் விடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்களும் மேக் அப் போடலாம்
அதேசமயம் ஆண் சிப்பந்திகளும் மேக் அப் அணிவதற்கு விமான நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
நவீன எதிர்பார்ப்புகளை சிறப்பாக பிரதிபலிப்பதற்கும், பல்லினக் கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட ஊழியர்களுக்கு சீருடைகள் சௌகரியமாக இருப்பதற்காக விதிகளில் மாற்றம் செய்துள்ளதாக காண்டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெண் ஊழியர்கள் கட்டாயமாக மேக் அணிய வேண்டும் என்பதுபோன்ற விதிகளை நீக்குமாறு தொழிற்சங்கங்கள் கோரிவந்த நிலையில் இம்மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைர காதணிகளுக்கும் அனுமதி
புதிய விதிகளின்படி, மேக் அணிய வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கும், விரும்பினால் தட்டையான பாதணிகளை அணிவதற்கும் ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வைர காதணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் கைக்கடிகாரத்தின் அளவு, வடிவம் ஆகியன தொடர்பான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக காண்டாஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.