சைபர் தாக்குதலுக்கு இலக்கான க்யூண்டாஸ் விமான சேவை நிறுவனம்
உலகின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான அவுஸ்திரேலிய விமான சேவை நிறுவனமான க்யூண்டாஸ் (Qantas) மீது கடந்த ஜூன் 30 ஆம் திகதி சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தொடர்பாடலுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு மூன்றாம் தரப்புக் சேவை தளத்தில் அசாதாரண செயற்பாடு காணப்பட்டதை அடுத்து, இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தளத்தில் ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகளின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள், பிறந்த திகதி மற்றும் 'frequent flyer' எண்கள் போன்ற தகவல்கள் சேமிக்கப்பட்டிருந்தன.
இந்தத் தகவல்கள் ஏதேனும் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் க்யூண்டாஸ் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட அமைப்பை முடக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
காசோலை விவரங்கள், கடன் அட்டை விவரங்கள், கடவுச்சீட்டு தகவல்கள் மற்றும் PIN எண்கள் உள்ளிட்ட நிதிச் சார்ந்த தகவல்கள் கசியவில்லை என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது.
மேலும், பயணிகளின் 'frequent flyer' கணக்குகள் எந்தவிதமான பாதிப்பும் அடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலிய காவல்துறை, சைபர் பாதுகாப்பு மையம் மற்றும் தகவல் ஆணையருக்கான அலுவலகத்திற்கு அறிவிக்கப்பெற்றுள்ளது.
இந்த சிக்கலால் நமது பயணிகளுக்கு ஏற்படும் குழப்பத்திற்கு மன்னிப்பு கோருகிறோம். இது எங்கள் விமான சேவைகளின் இயங்குதிறனை பாதிக்காது. பயணிகள் எந்த சந்தேகமும் இருந்தால், எங்களது விசேஷ உதவித் தொலைபேசிக்கு அழைக்கலாம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது போன்ற சைபர் தாக்குதல்கள் கடந்த சில மாதங்களாக அவுஸ்திரேலியாவில் அதிகரித்து வருகின்றன.
2024ம் ஆண்டு, அவுஸ்திரேலியாவின் பதிவுகளின் வரலாற்றிலேயே மிக மோசமான சைபர் தாக்குதல் ஆண்டாக இருந்ததாக, அவுஸ்திரேலிய தகவல் ஆணையரின் அலுவலகம் மார்ச் 2025இல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.