அமெரிக்காவின் இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் மீது துப்பாக்கி சூடு ; வெடிக்கும் கண்டனம்
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் இந்து மத கோவிலான இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது.
இந்த கோவில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 20 முதல் 30 துப்பாக்கி குண்டுகள் வரை கோவிலின் கட்டிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்கள் மீது பாய்ந்துள்ளன.
கோவில் மீது துப்பாக்கிச் சூடு
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்குள் இருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தூதரகம் கூறும்போது, இஸ்கான் கோவில் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். அனைத்து பக்தர்களுக்கும், சமூகத்திற்கும் துணைத் தூதரகம் முழு ஆதரவை வழங்குகிறது.
குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உள்ளூர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.