பிரிட்டன் ராணியின் இறுதிச் சடங்கு... தொலைக்காட்சி பார்வையாளர்களின் வாயைப்பிளக்கவைக்கும் எண்ணிக்கை
பிரிட்டன் ராணியாரின் இறுதிச் சடங்குகளை உள்ளூர் தொலைக்காட்சிகளில் பார்வையிட்ட மக்களின் எண்ணிக்கை 29 மில்லியனுக்கும் அதிகம் என தகவல் வெளியிட்டுள்ளனர்.
பிரிட்டன் ராணியாரின் நல்லடக்கம் திங்கட்கிழமை விண்ட்சர் மாளிகையில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த காட்சிகளை முழுமையாக ஒளிப்பரப்பிய பிபிசி ஊடகத்தில் மட்டும் 22.4 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
பிபிசி ஒன் தொலைக்காட்சியில் மட்டும் 2012 ஒலிம்பிக் இறுதிநாள் கொண்டாட்ட நேரலைக்கு பின்னர் மிக அதிகமாக, 19.5 மில்லியன் மக்கள் ராணியாரின் இறுதிச் சடங்குகளை பார்வையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஸ்கை தொலைக்காட்சியில் 1.8 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளதாகவும், ITVல் 5.3 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளதாகவும் தரவுகள் வெளியாகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக பிரித்தானிய உள்ளூர் ஊடகங்களில் மொத்தம் 29.5 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். ஆனால், 2020 யூரோ கிண்ணம் தொடரில் இத்தாலிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய கால்பந்து ஆட்டம் 31.8 மில்லியன் பிரித்தானியர்கள் கண்டுகளித்துள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.
இருப்பினும், உலகம் மொத்தமும் 4.1 பில்லியன் மக்கள் ராணியாரின் இறுதிச்சடங்குகளை தொலைக்காட்சிகளில் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.