உடுத்திய உடையால் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த ராணியார்: வெளிவரும் புதிய தகவல்
பிரித்தானிய ராணியார் இதுவரை தமது விருப்ப உடைகளால் ரகசியமாக பல்வேறு தருணங்களில் தமது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ராணியார் எப்போதுமே அரசியல் கருத்துகளை பொதுவெளியில் கூறுவது இல்லை என்பதுடன், இதுவரை எவருடனும் தனிப்பட்ட முறையில் விவாதித்ததாகவும் தகவல் இல்லை.
ஆனால் குறிப்பிட்ட தருணங்களில் தமது உடுத்தும் உடைகளால் ரகசியமாக தாம் சொல்ல எண்ணியதை சூசகமாக உணர்த்துவது உண்டு என சிலர் கருதுகின்றனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு முன்னெடுக்கப்பட்ட சில நாட்களில், விண்ட்சர் கோட்டையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ராணியார் சந்தித்தார். உக்ரைன் தொடர்பாக அப்போதைய பிரதமர் போரிஸ் ஜோன்சனுடன் விவாதிக்கவே ட்ரூடோ பிரித்தானியா சென்றிருந்தார்.
ஆனால் அன்றைய நாள் ராணியார் மற்றும் ட்ரூடோ சந்திப்பு முன்னெடுக்கப்பட்ட அறையில் மஞ்சள் மற்றும் நீல வண்ண பூக்களின் பெரிய கொத்து ஒன்று காணப்பட்டது. அது உக்ரைன் கொடியின் வண்ணமாகும்.
மட்டுமின்றி அந்த சந்திப்பின் போது ராணியார் மஞ்சள் மற்றும் நீல வண்ணத்தில் தான் உடை உடுத்தியிருந்தார். இது உக்ரைன் மீதான தமது ரகசிய ஆதரவை ராணியார் தெரிவித்ததாகவே ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.
மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற மக்கள் வாக்களித்து ஓராண்டுக்கு பின்னர், பிரித்தானிய நாடாளுமன்ற அவை துவக்க நாள் கூட்டத்தில் ராணியார் கலந்து கொண்டார். அதில் அரசுக்கு ஆதரவாகவே அவர் உரையை நிகழ்த்தினார்.
ஆனால் அன்று அவர் அணிந்திருந்தது நீல வண்ண உடை. அது ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியின் வண்ணம். ராணியார் ரகசியமாக ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கிறாரா என்று பலர் ஆச்சரியப்பட்டுள்ளனர் அப்போது.