இந்திய சுற்றுலாப் பயணிகளின் நடத்தை குறித்து தாய்லாந்தில் எழுந்த கேள்வி ; வைரலாகும் பதிவு
தாய்லாந்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பலகையை பார்த்த இந்திய டிஜிட்டல் கிரியேட்டர் ஸ்பர்ஷ் சுனில், அதற்கான காரணத்தை லாட்ஜ் உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து அவர் பகிர்ந்த சமூக வலைதளப் பதிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஸ்பர்ஷ் சுனில் சமீபத்தில் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
அப்போது அவர் தங்கியிருந்த லாட்ஜில், அறைகளுக்கு வெளியே ஆங்கிலத்தில் மட்டுமின்றி இந்தி மொழியிலும் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்கு வரும் நிலையில், குறிப்பாக இந்தி மொழியில் ஏன் எச்சரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் சுனிலுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் லாட்ஜ் உரிமையாளரிடம் கேட்டபோது, இந்தியாவில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும், அவர்களில் சிலர் விதிமுறைகளை பலமுறை எடுத்துக்கூறியும் பின்பற்றாததால் இந்தி மொழியிலும் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் உரிமையாளர் தெரிவித்ததாக சுனில் கூறியுள்ளார்.
இந்த அனுபவத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த சுனில், தாய்லாந்தில் சுற்றிப் பார்த்தபோது சில இந்திய சுற்றுலாப் பயணிகள் நடந்துகொண்ட விதம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, சில மசாஜ் நிலையங்களுக்கு வெளியே பெண்களிடம் சிலர் முறையற்ற வகையில் நடந்து கொண்டதாகவும், பெண்களிடம் செல்ஃபி எடுப்பதற்காக தொடர்ந்து தொந்தரவு செய்ததை தான் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டுக்கு சுற்றுலா செல்லும்போது அந்த நாட்டின் இடங்களை பார்வையிடுவது மட்டுமின்றி, அங்குள்ள மக்களையும் அவர்களின் கலாசாரம் மற்றும் நடைமுறைகளையும் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என சுனில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்தியாவுக்குள் மாநிலம், மொழி உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், வெளிநாடு செல்லும்போது இந்தியர்கள் என்ற அடையாளமே முன்னிலையாகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலரின் தவறான செயல்களால் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தேவையற்ற அவப்பெயர் ஏற்படுவதாகவும் அவர் தனது பதிவில் வேதனை தெரிவித்துள்ளார்.
சுனிலின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ள நிலையில், வெளிநாடுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டு சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் மக்களின் தனிப்பட்ட எல்லைகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளை, சிலரின் நடத்தையை வைத்து ஒட்டுமொத்த இந்திய சுற்றுலாப் பயணிகளையும் பொதுவாக மதிப்பிடக் கூடாது என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவாகி வருகின்றன.