சுவிஸ் மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ; வானில் பிரமிக்க வைக்கும் அரிய சூரிய கிரகணம்
சுவிட்சர்லாந்தில் இன்று (12) புதன்கிழமை மாலை அரிய பகுதி சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நேரப்படி (CEST), பகுதி சூரிய கிரகணம் மாலை 7:23 மணியளவில் ஆரம்பித்து, இரவு 8:50 மணியளவில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கிரகணம் முடிவடைவதற்கு முன்னரே சில பகுதிகளில் சூரியன் அஸ்தமித்துவிடும் என்பதால், சரியான நேரம் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும்.
கிரகணத்தின் உச்சநிலை சுமார் இரவு 8:15 முதல் 8:20 மணி வரை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில் சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் சந்திரன் சூரியனின் சுமார் 90 முதல் 93 சதவீதம் வரையிலான பகுதியை மறைக்கும்.
சூரிச்சில் அதிகபட்ச மறைப்பு சுமார் 91.9 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணம், சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் கடந்து செல்வதால் ஏற்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் இது பகுதி சூரிய கிரகணமாகவே தென்படும்; முழு சூரிய கிரகணம் அங்கு காணப்படாது.
மாலை நேரத்தில் சூரியன் மேற்கு முதல் வடமேற்கு திசையில் தாழ்வாகக் காணப்படும் என்பதால், கிரகணத்தை அவதானிக்க விரும்புவோர் கட்டிடங்கள், மரங்கள் அல்லது மலைகளால் மறைக்கப்படாத திறந்த வெளி, உயரமான பகுதிகள் மற்றும் ஏரிக்கரைகள் போன்ற இடங்களைத் தெரிவுசெய்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது.
பாதுகாப்பு எச்சரிக்கை
முறையான ISO-certified (ISO 12312-2) கிரகணக் கண்ணாடிகள் (Eclipse Glasses) இல்லாமல் சூரியனை நேரடியாகப் பார்க்க வேண்டாம்.
சாதாரண கூலிங் கிளாஸ்கள் கண்களைப் பாதுகாக்காது.