பிரபல அயர்லாந்து நகைச்சுவைக் கலைஞர் பி.ஜே. கேலகர் காலமானார்
அயர்லாந்து நகைச்சுவைக் கலைஞரும் ஊடகவியலாளருமான பி.ஜே. கேலகர் தனது 51ஆவது வயதில் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அயர்லாந்தின் முன்னணி நகைச்சுவைக் கலைஞர்களில் ஒருவராகக் கருதப்பட்ட அவர், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகத் தொலைக்காட்சி, வானொலி மற்றும் மேடை நிகழ்ச்சிகள் ஊடாகப் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தார்.

2005ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘Naked Camera’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அவர், 2007ஆம் ஆண்டு ஐரிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி அகாடமி விருதையும் பெற்றிருந்தார்.
அத்துடன், ‘The Young Offenders’ தொடரிலும் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்.
மனநலப் பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படையாகப் பேசிய அவர், சமூகத்தில் மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.
அவரது மறைவுக்கு அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் கலைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எனினும், அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தத் துயரமான நேரத்தில் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு அவரது முகவர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.