அமெரிக்காவிலிருந்து திரும்பும் கனடியர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி
கடந்த செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவிலிருந்து கனடியர்கள் மேற்கொண்ட மீள்பயணங்கள் கடந்த ஆண்டு இதேகாலத்தை விட 30.9% குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் புதிய தரவுகளில் தெரிவித்துள்ளது.
அதேசமயம், அமெரிக்க குடிமக்களின் கனடா பயணங்களும் 2.6% குறைந்துள்ளன. ஜூன் – ஆகஸ்ட் மாதங்களில் தொடர்ந்து மூன்று மாதங்கள் அமெரிக்கர்கள் கனடாவுக்கு அதிகமாக வந்திருந்தனர்.
ஆனால் செப்டம்பர் அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மொத்த சர்வதேச பயணங்கள் 22.7% குறைவு செப்டம்பரில் கனடியர்கள் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய மொத்த பயணங்கள் 3.3 மில்லியன்.

இது கடந்த ஆண்டைவிட 22.7% குறைவு. அமெரிக்காவிலிருந்து கார்கள் மூலம் திரும்பிய பயணங்கள்: 33.8% சரிந்து 1.6 மில்லியனாக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து விமானத்தில் திரும்பிய பயணங்கள்: 19.3% குறைந்து 567,100 ஆக பதிவாகியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் திரும்பிய கனடியர்கள்: 6.1% உயர்ந்து 997,400ஆக பதிவாகியுள்ளது. செப்டம்பரில் அமெரிக்க குடிமக்கள் கனடாவுக்கு மேற்கொண்ட பயணங்கள் 2.1 மில்லியன் என தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 1.2 மில்லியன் பயணங்கள் கார் பயணங்களாகும். வெளிநாட்டு பயணிகளின் கனடா வருகை 7.4% உயர்ந்து 734,200 ஆக உயர்ந்துள்ளது.