பிரான்ஸ் கலவரங்கள்; 207 மில்லியன் யூரோக்கள் இழப்பீடு
பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் கடந்த ஒக்டோபர் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு 207 மில்லியன் யூரோக்கள் செலவாகும் என காப்பீட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான France Assureurs தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக 5,280 காப்பீட்டு இழப்பீட்டுக் கோரிக்கைகள் பதிவாகியுள்ளதாகவும், இது தொடர்பான முதலாவது மதிப்பீடு வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, பொருளாதார அமைச்சர் Roland Lescure, இந்த வன்முறைச் சம்பவங்களால் பல நூறு மில்லியன் யூரோக்கள் பெறுமதியான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் பெரும்பகுதியை காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
வணிக நிறுவனங்களுக்குச் சொந்தமான கட்டடங்கள் மற்றும் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டமை, கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்டவற்றால் மாத்திரம் சுமார் 198 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக 4,050 இழப்பீட்டுக் கோரிக்கைகள் பதிவாகியுள்ளன. அதேவேளை, தனிநபர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக 3.5 மில்லியன் யூரோக்களும், சேதப்படுத்தப்பட்ட 860 வாகனங்களுக்கான இழப்பீடாக 6 மில்லியன் யூரோக்களும் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
வெறும் 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெற்ற சம்பவங்களால் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என France Assureurs சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு பிரான்ஸில் நான்கு வாரங்களாக நீடித்த கலவரங்களால் காப்பீட்டு நிறுவனங்களுக்கு 209 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டிருந்தது.
அதேபோன்று, 2018–2019ஆம் ஆண்டுகளில் பல மாதங்களாக நீடித்த மஞ்சள் மேலங்கி போராட்டங்களின்போது இடம்பெற்ற வன்முறைகளால் 256 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கடந்த அக்டோபர் மாத வன்முறைகளுக்கான தற்போதைய மதிப்பீடுகள் இறுதியானவை அல்ல என்றும், சேதங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் நிபுணர்களின் ஆய்வுகள் நிறைவடைந்த பின்னர் இழப்பீட்டுத் தொகை மாற்றமடையலாம் என்றும் காப்பீட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.