மிசிசாகாவில் கார் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு!
கனடாவின் மிசிசாகா நகரில் நேற்றிரவு இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வியாழக்கிழமை மாலை 6:00 மணியளவில் எரிண்டேல் ஸ்டேஷன் வீதி மற்றும் டண்டாஸ் வீதி மேற்கு ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் விபத்தொன்று இடம்பெற்றதாக அவசர சேவைப் பிரிவினருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
எரிண்டேல் ஸ்டேஷன் வீதியில் தெற்கு நோக்கிப் பயணித்த வெள்ளை நிற எஸ்.யூ.வி ரக வாகனம் ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற ஆண் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் பரிசோதகர் டேவிட் லாயிங் தெரிவித்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும் வரை அவரது அடையாளம் வெளியிடப்படவில்லை.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தங்கியிருந்ததாகவும், விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.