கனடாவுக்கு அகதிகளின் வருகை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை
கனடாவின் முக்கியமான எல்லைச் சாவடிகளில் ஒன்றான சென் பெர்னாட் டி லாகொல் St-Bernard-de-Lacolle சாவடியில் அகதிகள் கேட்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடிவரவு கொள்கைகள் காரணமாக, கனடாவுக்கு மற்றொரு பெரிய அகதி அலை உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மட்டும், சென் பெர்னாட் டி லாகொல் St-Bernard-de-Lacolle சாவடியில் மார்ச் மாதத்தில் 1,356 மற்றும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை 557 அகதி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஏராளமானோர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். மக்கள் பயத்தில் உள்ளனர்.
அவர்களது தற்காலிக குடியுரிமை அமெரிக்காவால் ரத்து செய்யப்படுவதை பற்றிய கடிதங்கள் வந்தவுடனே, அவர்கள் வெளியேற வழிகளை தேட ஆரம்பிக்கின்றனர்" என மோன்ட்ரியலில் உள்ள அகதிகள் மற்றும் ஆவணமற்ற குடியாளர்களுக்கு உதவுவதற்காக இயங்கும் குழுவின் பேச்சாளர் பிரான்ஸ் ஆண்ட்ரே தெரிவித்துள்ளார்.
கனடா எல்லை பாதுகாப்பு முகமை (CBSA) தரவின்படி, 2025 இல் ஏப்ரல் 6 வரை 5,246 அகதி விண்ணப்பங்கள் மட்டுமே பெற்றுள்ளதுடன், இது கடந்த வருடம் இதே காலப்பகுதியில் (11,118) இருந்ததைவிட 53% குறைவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் எதிர்வரும் நாட்களில் அகதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.