குடும்பத்துடன் சவூதி அரேபியாவிற்கு சென்ற ரொனால்டோ!
போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவின் தலைநகர் றியாத்தை சென்றடைந்துள்ளார்.
றியாத் நகரிலுள்ள அல் நாசர் கழகத்தில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் ரொனால்டோ கையெழுத்திட்டுள்ளார்.
இதற்காக அவருக்கு வருடாந்தம் 200 மில்லியன் யூரோவுக்கு (சுமார் 7800 கோடி இலங்கை ரூபா/ 1,768 கோடி இந்திய ரூபா) அதிகமான ஊதியம் வழங்கப்படும் என நம்பப்படுகின்றது. நேற்றிரவு ரொனால்டோ றியாத் நகரை சென்றடைந்தார்.
அவரை வரவேற்பதற்கான பதாகைகள் றியாத் நகரில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ரொனால்டோவுடன் அவரின் மனைவி ஜோர்ஜியா ரொட்றிகஸ் மற்றும் குடும்பத்தினரும் சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர். உதவியாளர்களைக் கொண்ட பெரிய குழுவுடன் அவர் வந்துள்ளார்.
தனியார் பாதுகாப்பு நிறுவன உத்தியோகத்தர்களையும் அவர் அழைத்துவந்துள்ளார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரொனால்டோ வரும் நிலையில், றியாத் நகரின் விமான நிலையத்தைச் சூழ கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பல சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தாக தெரியவந்துள்ளது.