பிரபல நடிகர் ரஸ்ஸல் பிராண்ட் பாலியல் வல்லுறவு வழக்கு ; குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு
பிரித்தானிய நகைச்சுவை நடிகரும் முன்னாள் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ரஸ்ஸல் பிராண்ட் (Russell Brand), பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
லண்டனிலுள்ள சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் நான்கு வாரங்களாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் நிறைவில், நடுவர் குழுவினர் அவருக்கு எதிராக இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இதன்படி, ஒரு பெண்ணைப் பாலியல் வல்லுறவு செய்தமை மற்றும் மூன்று பெண்களிடம் பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நான்கு பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
எனினும், அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த ஏனைய இரண்டு பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டு ஆகியவற்றிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரஸ்ஸல் பிராண்ட் குற்றச்சாட்டுகளை ஆரம்பம் முதலே மறுத்து வந்ததுடன், விசாரணையின்போதும் தனது மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்தார்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி அவருக்கான தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. இதற்கிடையில், தண்டனை அறிவிக்கப்படும் வரை அவருக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளதுடன், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியத் திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி உலகில் பிரபலமான நபராக விளங்கிய ரஸ்ஸல் பிராண்டுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.