உக்ரைன் ஆதரவு... கனடா மீது நடவடிக்கை மேற்கொண்ட ரஷ்யா
உக்ரைன் விவகாரத்தில் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள கனேடிய செனட்டர்களுக்கு தடைவிதித்து ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால் தற்போதுள்ள 90 செனட்டர்களில் 86 பேர்கள், ரஷ்யாவில் பயணம் மேற்கொள்ள முடியாமல் போகும் என்றே கூறப்படுகிறது. குறித்த தகவலை ரஷ்ய வெளிவிவகார அமைச்சகத்தின் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, முன்னாள் செனட்டர் Diane Griffin என்பவரையும் ரஷ்யா தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்துள்ளது. மேலும், தற்போதைய பட்டியலில் நான்கு செனட்டர்களின் பெயர்கள் தடைவிதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.
ஆனால் அதில் ஒருவர் முன்னரே ரஷ்யாவின் தடைவிதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளனர். பட்டியலில் இடம்பெறாத செனட்டர் Tony Dean குறிப்பிடுகையில், ரஷ்ய தடைவிதிப்புக்கு தாம் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் கனடா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மட்டுமின்றி, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கவும் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், ஒப்பந்தங்களையும் ரத்து செய்துள்ளது.
இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் ரஷ்ய எரிபொருட்களையே நம்பியிருப்பதால், ரஷ்யா தொடர்ந்து ஆதாயமடைந்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம், உக்ரேனை ஆதரித்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நூற்றுக்கணக்கான எம்.பி.க்கள் மற்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் உட்பட பிற கனேடியர்களை ரஷ்யா தடைவிதித்துள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.