உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல் ; இருவர் பலி
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் தெற்கு ஜபோரிஜியா மாகாணம் மற்றும் கடற்கரை நகரமான ஒடேசா பகுதியின் மீதும் ரஷ்யா, சுமார் 3 ஏவுகணைகள் மற்றும் 115 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக, உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்ட ஏராளமான ட்ரோன்கள் தகர்க்கப்பட்டதாகவும், சர்வதேச நாடுகள் தங்களுக்கு அதிகப்படியான வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கவேண்டுமெனவும், உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ வலியுறுத்தியுள்ளார்.
நியூயோர்க் நகரத்துக்குச் சென்றுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் ரஷ்யா உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.