தைவானில் காலநிலை சீற்றத்தினால் 14 பேர் பலி
தைவானில் காலநிலை சீற்றத்தினால் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தைவானில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்திய ராகசா புயல், தற்போது ஹாங்காங், ஷென்சென் உள்ளிட்ட சீனாவின் தெற்கு கடற்கரை நகரங்களை நோக்கி முன்னேறி வருகிறது.
இதுவரை தைவானில் மட்டும் 14 பேர் உயிரிழந்ததுடன், 124 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்த புயல் பிலிப்பைன்ஸ் வடக்கு தீவுகள் வழியாக நுழைந்து, தைவானின் மலைப்பகுதிகளை கடந்து, கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது.
தைவானின் ஹுவாலியென் மாவட்டத்தில் ஒரு ஏரி கரை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 12 பேர் பலியாகினர்.
நூற்றுக்கணக்கானோர் இன்னும் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குவாங்டாங் மாகாணத்தில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், 10,000-க்கும் மேற்பட்ட கப்பல்கள் கடலோரத்திலிருந்து பாதுகாப்பான துறைமுகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
38,000 தீயணைப்புப் படையினர் அவசர உதவிக்காக தயாராக உள்ளனர் என்று அரச ஊடகம் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹாங்காங் மற்றும் மகாவோவில் பள்ளிகள், அலுவலகங்கள், பொதுப் போக்குவரத்து மூடப்பட்டுள்ளன.
கடும் காற்று பலத்துடன் (மணிக்கு 168 கி.மீ வரை) வீசியதால் மரங்கள் வீழ்ந்தன, கட்டிடங்களில் இருந்த உதிரிகள் சிதறின. கடல்சரிவு காரணமாக ஹோட்டல்களில் தண்ணீர் புகுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.