உக்ரைன் மீது ரஷ்யா அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) போலாந்துக்கு சென்றுள்ள நிலையில் அந்நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள உக்ரைன் நகரம் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 32-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்ற மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால், உக்ரைன் - ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையில், உக்ரைனின் அண்டை நாடான போலாந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேட்டோ நாடான போலாந்துக்கு சென்றுள்ள ஜோ பைடன் அமெரிக்க வீரர்கள் மற்றும் நேட்டோ படையில் உள்ள வீரர்கள் மத்தியில் பேசினார். அதேபோல், போலாந்துக்கு வந்துள்ள உக்ரைன் மந்திரிகளுடனும் ஜோ பைடன் (Joe Biden) பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், உக்ரைனின் லீவ் நகரில் ரஷ்யா நேற்று முதல் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. லீவ் போலாந்து எல்லைக்கு மிக அருகில் உள்ள நகரமாகும்.
போலாந்தில் இருந்து 45 மைல் தொலைவில் உள்ள லீவ் நகரம் மீது ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து அந்த நகரின் ஒருசில பகுதிகளில் வெடிவிபத்துகளும் நடைபெற்றுள்ளது.
இந்த தாக்குதல் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோ பைடன்(Joe Biden) போலாந்துக்கு சென்றுள்ள நிலையில் அந்நாட்டுக்கு மிக அருகே ரஷ்யா ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வரும் நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.