மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த ரஷ்யா; தவிக்கும் உக்ரைன் மக்கள்
ரஷிய- உக்ரைன் போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், உக்ரைன் மீது ரஷியா மூன்று நாட்களாக இரவுநேர தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு உக்ரைனின் தலைநகர் கீவை சுற்றியுள்ள பகுதிகளில் ரஷியா டிரோன் மூலம் நடத்திய குண்டுவீச்சில் ஒருவர் பலியானதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. தாக்குதல் தொடர்பில் கீவ் நகர மேயர் விடாலி க்லிட்ச்கோ கூறுகையில்,
குண்டுவீச்சிற்கு பிறகு சோலோமியான்ஸ்கி, செவ்சென்கிவ்ஸ்கி, போடில்ஸ்கி, மற்றும் டார்னிட்ஸ்கி ஆகிய நகரங்களில் மீட்பு நடவடிக்கைக்காக அவசர உதவிக்குழுவினர் விரைந்தனர்" என தெரிவித்தார்.
தொடர் தாக்குதல் - திணறும் மக்கள்
உக்ரைன் தலைநகரின் மத்தியில் உள்ள சோலோமியான்ஸ்கி மாவட்டத்தில் ரஷிய டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் டிரோன் பாகங்கள் விழுந்ததில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். டார்னிட்ஸ்கி மாவட்டத்திலும் இது போன்று கீழே வீழ்ந்த ரஷிய டிரோன்களால் ஒரு வீடு சேதமடைந்தது.
செவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தில் ஒரு கட்டிடத்தின் பால்கனி தீக்கிரையானது. இந்த தாக்குதலை ஈரான் நாட்டு ஷாஹெட் டிரோன்கள் மூலம் நடைபெற்ற ஒரு "பெரும் தாக்குதல்" என விமர்சித்துள்ள கீவ் நகர ராணுவ தலைமை அதிகாரி செர்ஹி பாப்கோ, "விமானப்படையின் எதிர்தாக்குல் படை, சுமார் ரஷியாவின் 10 தாக்குதல் இலக்கை அழித்தது" என பதிவிட்டுள்ளார்.
மேலும் உக்ரைனின் வேறு சில பகுதிகளான தென்கிழக்கில் உள்ள சபோரிழியாவிலும், தெற்கில் உள்ள மைகோலெய்வ் பகுதியிலும் மற்றும் மேற்கில் உள்ள மெல்னிட்ஸ்கி பகுதியிலும் தாக்குதல் நடந்திருக்கிறது.
அதேவேளை நேட்டோவின் உறுப்பினராகும் முயற்சியின் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, லிதுவேனியா நாட்டிற்கு சென்றுள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.