ட்ரம்ப்பின் எதிர்ப்பை மீறும் ரஷ்யா ; ஒரே இரவில் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையை மீறி உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர்நிறுத்தத்திற்கு, 50 நாட்களுக்குள் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும், இல்லையென்றால் ரஷ்யா மீது கடுமையானத் தடைகள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், உக்ரைனின் ஏராளமான நகரங்களின் மீது ரஷ்யா நேற்று (15) இரவு முதல் இன்று (16) அதிகாலை வரை கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியா பகுதிகளிலிருந்து, இஸ்காந்தர் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலமாகவும், சுமார் 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலமாகவும் உக்ரைன் நகரங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, உக்ரைனின் விமானப் படை தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி விளாதிமீர் ஸெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி மற்றும் வின்னிடிசியா, கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
மேலும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்கா தலைமையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின், மூலம் தீர்வு எட்டப்படாத சூழலில், உக்ரைன் மீதான தனது தாக்குதல்களை கடந்த சில வாரங்களாக ரஷ்யா அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.