தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர் ; அமெரிக்காவில் டிரம்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (ஜூலை 28) வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கிய ரஷ்யா–உக்ரைன் போர் மூன்றாவது ஆண்டையும் கடந்தும் தொடரும் நிலையில், இந்தச் சந்திப்பு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
போரின் ஆரம்பம் முதல் உக்ரைனுக்கு அமெரிக்கா இராணுவ, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், ஜூலை மாதத்தில் டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையே நடைபெறும் இரண்டாவது நேரடி சந்திப்பாக இது அமைகிறது.
இந்தச் சந்திப்பின் போது, ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான வழிமுறைகள், போர்நிறுத்தம் தொடர்பான முயற்சிகள், அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அண்மையில் ஜெலென்ஸ்கி வெளியிட்டிருந்த கருத்தும் இந்தச் சந்திப்பில் கவனம் பெறக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜூலை மாதத் தொடக்கத்திலிருந்து வளைகுடா நாடுகள் மற்றும் அங்கு அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் தொடர்பாக ரஷ்யா செயற்கைக்கோள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அந்தத் தகவல்கள் பின்னர் ஈரானுடன் பகிரப்பட்டதாக உக்ரைன் தரப்பில் பதிவாகியுள்ளதாகவும் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், மத்திய கிழக்கு பாதுகாப்பு நிலைமை மற்றும் ரஷ்யாவின் பிராந்திய நடவடிக்கைகள் குறித்தும் டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையே கருத்துப் பரிமாற்றம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு இந்தச் சந்திப்பு புதிய திருப்புமுனையாக அமையுமா என்பது குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.