ரஷ்யா - உக்ரைன் போர்; 500 இந்தியர்கள் எடுத்த முடிவு; பரபரப்பை ஏற்படுத்திய தகவல்
ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy)சர்வதேச அணி கொண்ட படை உருவாக்க உத்தரவிட்டதுடன், இதற்காக உக்ரைன் அரசு சார்பில் இணையதளம் ஒன்றும் உருவாக்கப்பட்டது.
அதில் உக்ரைன் ராணுவத்தில் தன்னார்வலராக சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் எந்த நாட்டினரும் சேரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் அதில் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குலேபா (Dmytro Kuleba) கூறும் போது, 52 நாடுகளை சேர்ந்த 20 ஆயிரம் பேர் சர்வதேச படை அணியில் சேர்ந்துள்ளனர், என்று தெரிவித்தார்.
இதற்கிடையே உக்ரைன் ராணுவத்தில் தமிழகத்தின் கோவையை சேர்ந்த மாணவர் ஒருவரும் சேர்ந்துள்ளார். இதுதொடர்பாக தகவல் புகைப்படத்துடன் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியதது.
எனினும் இது தொடர்பாக மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் உக்ரைன் ராணுவத்தில் சேர 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி உக்ரைன் உருவாக்கி உள்ள சர்வதேச படை அணியில் சேர சில முன்னாள் படை வீரர்கள் உள்பட 500 பேர் விண்ணப்பித்து உள்ளதாக தூதரக தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேசமயம் உக்ரைன் ராணுவத்தில் சேர விண்ணப்பித்தாலும் அதற்கு நீண்ட செயல் முறைகள் உள்ளது. அதை ஆராய்ந்த பின்னரே உக்ரைன் அரசு, தன்னார்வலர்களின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளும்.
தற்போது, உக்ரைன் ராணுவத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, சுவீடன், மெக்சிகோ, லிதுவேனியா ஆகிய நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள் ராணுவ வீரர்களாக இணைந்துள்ளனர்.
இதனையடுத்து தற்போது இவ்வாறு இணைந்தவர்களை ரஷ்யாவுக்கு எதிராக களமிறக்க உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், உக்ரைனின் திட்டம் உக்ரைனுக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.