ரஷ்யாவுக்கு ஜப்பான் அளித்த கடும் நெருக்கடி: உலக நாடுகளுக்கு கோரிக்கை
உக்ரைன் விவகாரம் தொடர்பில் ரஷ்யாவின் தூதரக மற்றும் வர்த்தக அதிகாரிகளை வெளியேற்றுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. மட்டுமின்றி, ரஷ்ய நிலக்கரி மற்றும் எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக நிறுத்தவும் ஜப்பாம் முடிவு செய்துள்ளது.
மேலும், ரஷ்ய மரக்கட்டைகள், ஓட்கா மற்றும் பிற பொருட்களின் இறக்குமதியை ஜப்பான் தடை செய்யும் என்றும், ரஷ்யாவில் புதிய ஜப்பானிய முதலீட்டை தடை செய்யும் என்றும் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
மேலதிகமாக, 400 தனிப்பட்ட நபர்கள் மற்றும் குழுக்கள் மீது பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும் ஜப்பான் முடிவு செய்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான் படையெடுப்பில் நடத்தப்பட்ட போர் குற்றங்களுக்கு ரஷ்யா பொறுப்பு கூற வேண்டும் எனவும் ஜப்பான் கோரிக்கை வைத்துள்ளது. மேலும், ரஷ்யாவை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் பொதுவானது என குறிப்பிட்டுள்ள அவர், இதன்பொருட்டு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்கவும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை, எட்டு ரஷ்ய தூதர்கள் மற்றும் வர்த்தக அதிகாரிகளை வெளியேற்றுவதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஐரோப்பிய நாடுகள் டசின் கணக்கான ரஷ்ய தூதர்களை ஏற்கனவே வெளியேற்றியுள்ளன.
மட்டுமின்றி, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவும் ரஷ்யாவிற்கு எதிரா நிலக்கரி இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் உட்பட பொருளாதாரத் தடைகளை முடுக்கிவிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.