உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய கடற்படைத் தளபதி கொல்லப்பட்டாரா?
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் துவங்கி 1½ ஆண்டுகளாக இதுவரையில் முடிவின்றி இப்போர் இடம்பெற்று வருகின்றது.
உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகள் செய்து வருவதால் ரஷ்ய படையை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் ஆக்ரோஷத்துடன் போரிட்டு வருகின்றனர். உக்ரைனின் சில நகரங்களை ரஷ்யபடையினர் கைப்பற்றி உள்ளனர்.
அவற்றை உக்ரைன் வீரர்கள் பேராடி மீட்டு வருகின்றனர். ரஷ்யாவின் இராணுவ நிலைகளை குறிவைத்து உக்ரைன் வீரர்கள் தாக்குதல் நடாத்தி வருகின்றனர்.
சமீபத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா பகுதியில் உள்ள வெடிமருந்து குடோனில் ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இம்மாத தொடக்கத்தில் கிரீமியா தலைநகர் செவஸ்டோ போல் துறைமுகத்தில் உள்ள கருங்கடல் ரஷ்யா கடற்படை தலைமையகத்தில் உக்ரைன் ஏவுகணை வீசி தாக்குதலை நடத்தியது.
கப்பலில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைன் படை வீசியது. இந்த தாக்குதலில் கருங்கடல் கடற்படை தளபதியும், ரஷ்யாவின் மூத்த கடற்படை அதிகாரிகளுள் ஒருவரான விக்டர் சோகோலோவ் மற்றும் 33 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் படை தெரிவித்து உள்ளது.
ஆனால் இந்த தகவலை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை உறுதிபடுத்தவில்லை.
இதனால் இந்த ஏவுகணை தாக்குதலில் கடற்படை தளபதியின் இறப்பு குறித்து மர்மம் நீடித்து வருகிறது.
தாக்குதல் நடாத்தப்பட்ட கிரீமியா பகுதியை உக்ரைனிடம் இருந்து ரஷ்யா கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.