ரஷியா -உக்ரைன் போர் நிறுத்தம் ; டிரம்ப்புடன் புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை
ரஷியா -உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் ரஷிய ஜனாதிபதி புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் மார்ச் 12 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் அதிபர் அலுவலகத் தலைவர் ஆண்ட்ரி யெர்மக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரஷிய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் - உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது.
அதன் காரணமாக, ஸெலென்ஸ்கியுடனான பேச்சுவாா்த்தையை டிரம்ப் பாதியில் முடித்துக்கொண்டு புறப்பட்டார்.
இருப்பினும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 30 நாள் போர்நிறுத்த திட்டத்தில் கையெழுத்திட ரஷிய ஜனாதிபதி புதினை வற்புறுத்த அமெரிக்க நிர்வாகம் முயற்சித்து வரும் நிலையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் ரஷிய ஜனாதிபதி விளாதீமிர் புதினும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார்.