ரஷ்ய குண்டுவீச்சுக்கு நடுவே சிக்கிய கனேடிய மீனவர்: பதைபதைக்க வைக்கும் சம்பவம்
உக்ரைனில் ரஷ்ய குண்டுவீச்சுக்கு நடுவே, அப்பாவி மக்களை மீட்க துணிந்து போராடிய கனேடிய மீனவர் ஒருவர் தமது பதைபதைக்க வைக்கும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
கனடாவின் நோவாஸ்கொடியாவில் குடியிருக்கும் மீனவர் Lex Brukovskiy. உக்ரேனியரான இவர் தமது மக்கள் படும் துயரம் பொறுக்க முடியாமல், தம்மால் இயன்ற உதவிகளை முன்னெடுக்க உக்ரைன் சென்றுள்ளார்.
இந்த நிலையிலேயே, உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தியுள்ளார் மீனவர் Lex Brukovskiy. ரஷ்யர்கள் உக்ரைனுக்குள் புகுந்து உக்ரைன் துருப்புகளுடன் போரிடவில்லை என குறிப்பிட்டுள்ள Lex Brukovskiy, அப்பாவி பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தி நரவேட்டை ஆடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் உக்ரைன் சென்றிருந்த Brukovskiy, முதியவர்கள், பெண்கள், சிறார்கள் என சுமார் ஒரு டசின் பேர்களுடன் வாகனம் ஒன்றில் புறப்பட்டு, அவர்களை பத்திரமாக வெளியேற்ற துணிந்து போராடியுள்ளார்.
ரஷ்ய துருப்புகளின் கண்மூடித்தனமான குண்டுவீச்சால், உக்ரைனில் பல பகுதிகளில் அப்பாவி மக்கள் சிக்கிக்கொண்டுள்ளதாகவும், உணவு, தண்ணீர், மின்சாரம் உட்பட அடிப்படை தேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் சாவின் விளிம்பில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
Chernihiv நகரில் இருந்து பிரதான பகுதிகளை இணைக்கும் பாலம் ஒன்று ரஷ்ய துருப்புகளால் தகர்க்கப்பட்டு, மனிதநேய செயல்கள் மொத்தமும் முடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவி மக்கள் நகரத்தில் இருந்து வெளியேறிவிடாமல் இருக்க, சாலைகள் பாலங்கள் உள்ளிட்டவைகளை ரஷ்ய துருப்புகள் சேதப்படுத்தியுள்ளதாகவும், மக்கள் செய்வதறியாது பதுங்கு குழிகளில் மறைவாக உள்ளனர் எனவும், உள்ளூர் நிர்வாகத்தால் போதிய உதவிகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நோவாஸ்கொடியா மக்கள் ஒன்றிணைந்து சுமார் 20,000 டொலர் தொகை வரையில் திரட்டி, உக்ரேனிய மக்களுக்காக குறித்த மீனவர் ஊடாக அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.