தஞ்சமடைந்த பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்திய ரஷ்யா! 21 பேருக்கு நேர்ந்த சோகம்
மெரேஃபா நகரில் இருக்கும் பள்ளி மற்றும் சமூக மையம் மீது ரஷ்ய துருப்புகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 23 வது நாளாக தாக்குதலை தொடுத்து வருகின்றது. அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்த போர் காரணமாக மக்கள் தஞ்சம் அடைந்துள்ள பள்ளிகள், திரையரங்குகள் மற்றும் சமூக மையங்களை குறி வைத்து ரஷ்ய துருப்புகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், மரியுபோல் நகரில் இருக்கும் திரையரங்கம் மற்றும் நீச்சல் குள வளாகம் மீது ரஷ்ய துருப்புகள் குண்டு வீசி தாக்கியதாக, அந்நகர உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அந்த இடங்களில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் பலர் குழந்தைகள். ரஷ்ய துருப்புகளின் தாக்குதலில் அந்த கட்டிடம் பலத்த சேதம் அடைந்தது. 1,000 பேர் வரை அந்த கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உயிர் பிழைத்தவர்களைக் காப்பாற்ற மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேபோல் கிழக்கு உக்ரைன் நகரமான மெரேஃபாவில் ரஷ்ய துருப்புகள் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25 பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.