ரஷ்யப் போர்க்கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: கப்பலை மூழ்கடித்ததாக ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவிப்பு
லிபியாவின் பெங்காசி கடற்படைத் தளத்தில் நங்கூரமிட்டிருந்த ரஷ்யக் கடற்படையின் போர்க்கப்பல் மீது, உக்ரேனில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏழு கடல் ட்ரோன்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தி அதனை மூழ்கடித்துள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி விளாடிமீர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
முன்வரிசையிலிருந்து சுமார் 2,400 கிலோ மீற்றர் (1,500 மைல்கள்) தொலைவில் உள்ள மத்திய தரைக்கடலில் ஞாயிற்றுக்கிழமை (22) இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜெலன்ஸ்கி 'எக்ஸ்' தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்ட ரஷ்யாவின் அதிநவீன 'மெர்குரி' போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாகவும், ஆயுதங்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரஷ்ய சரக்குக் கப்பலான 'MV அங்காரா' தாக்கப்பட்டதாகவும், அதிலிருந்த 'Ka-27' இராணுவ ஹெலிகொப்டர் அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் பாதுகாப்புப் படை மற்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் மற்றும் விநியோகங்களுக்காகப் பெங்காசி கடற்படைத் தளத்தில் நங்கூரமிட்டிருந்த ரஷ்யக் கப்பல் மீது குறைந்தது இரண்டு கடல் ட்ரோன்கள் தாக்கியதில் லிபிய மற்றும் ரஷ்ய நாட்டவர்கள் உட்பட சுமார் 10 பேர் காயமடைந்ததாக லிபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கப்பலில் இருந்த வெடிபொருட்கள் வெடித்தமையே பாரிய வெடிப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு மோதல்களுக்கான களமாக லிபியா மாறக்கூடாது என ஐ.நா.லிபியா தூதுக்குழு கவலை வெளியிட்டு, சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மறுபுறம், கீவ் அருகே உள்ள கிராமத்தில் ஐந்து மாடிக் குடியிருப்புத் தொகுதி மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகப் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளிர்காலத்திற்கு முன்னதாக உக்ரேனின் எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.