ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து ; ஈரான் - ஓமான் இடையே முக்கிய உடன்பாடு
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்காக பாதுகாப்பான போக்குவரத்துப் பாதைகளை அமைப்பது தொடர்பில் ஈரானும் ஓமானும் உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்துள்ளார்.
உலகளவில் மசகு எண்ணெய் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு முக்கியமான கடல்வழியாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற தொழில்நுட்ப மட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை வழியாக சர்வதேச கப்பல் போக்குவரத்து இடம்பெற்று வரும் நிலையில், கப்பல்களின் பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கையாக இந்த உடன்பாடு பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையிலான மேலதிக தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் மூலம் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்கான நடைமுறைகள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.