ஊழல் வழக்கில் சிக்கிய சாம்சங் உரிமையாளருக்கு பொது மன்னிப்பு
ஊழல் வழக்கில் சிக்கிய சாம்சங் உரிமையாளருக்கு தென் கொரிய ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் உரிமையாளரும் பில்லியனருமான லீ ஜே யங், உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 278வது இடத்தில் உள்ளார். கடந்த 2021 ஜனவரி மாதம் இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமானது.
இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 2021ல் பரோலில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் தென் கொரிய ஜனாதிபதி தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி லீ ஜே யங்கை வழக்கில் இருந்து விடுவித்துள்ளார்.
சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், தென் கொரிய பொருளாதாரத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் லீ ஜே யங்குக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லீ ஜே யங் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகளைப் பெருக்கி வேலை வாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை சீரான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவுவார் என்று தென் கொரிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் சாம்சங் நிறுவனம் மொத்தம் 356 பில்லியன் டொலர் அளவுக்கு முதலீடு செய்ய இருப்பதாகவும், இதனால் 80,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே 20,000 ஊழியர்களை அமெரிக்காவில் பணியமர்த்தியுள்ளது. மேலும் டெக்சாஸில் புதிய தொழிற்கூடம் ஒன்றை நிறுவி வருவதுடன், 2024ல் செயல்பட தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும், லீ உடன் சேர்த்து மொத்தம் மூன்று தொழிலதிபர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
லாட்டே குழும நிர்வாகி சிங் டாங் பின்னுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.