அமெரிக்காவில் 600 பில்லியன் முதலீடு செய்யும் சவுதி அரேபியா
அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான், வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சிவப்பு கம்பள வரவேற்பு
ரியாத் மற்றும் வாஷிங்டன் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமெரிக்கா சென்றுள்ள சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ராணுவ வீரர்கள் புடைசூழ சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார்.
இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பில் அமெரிக்காவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு எஃப்-35 விமானங்கள் ஏற்றுமதி செய்வது குறித்த ஒப்பந்தங்கள், வணிகம், அமைதி, செய்யறிவு மற்றும் தொழில்நுட்ப வணிகம் குறித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் ட்ரம்ப் பேசுகையில், “அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்ய நீங்கள் ஒப்புக்கொண்டதற்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
அவர் எனது நண்பர் என்பதால், அவர் 1 டிரில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 88 லட்சம் கோடி) அவர் முதலீடு செய்யலாம். ஆனால், அவருக்காக நான் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.
சௌதி அரேபியாவின் முதலீட்டால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு மற்றும் வளங்கள் அதிகரிக்கும். மேலும், வால் ஸ்ட்ரீட்டில் அதிக முதலீடுகள் செய்யப்படும்” என்றார் டிரம்ப். அதனைத் தொடர்ந்து பேசிய இளவரசர் முகமது பின் சல்மான், “முதலீடுகள் விரைவில் ஒரு ட்ரில்லியன் டாலர்களாக உயர்த்தப்படும்” எனத் தெரிவித்தார்.