கல்விப் பணியாளர்கள் போராட்டம்; நிகழ்நிலை தொழில்நுட்பத்திற்கு திரும்பும் பாடசாலைகள்
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நிகழ்நிலை தொழில்நுட்பத்தில் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
பல்லாயிரக் கணக்கான கல்விப் பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் வரையில் போராட்டம் தொடரும் என கல்விப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாகாணத்தின் பல பாடசாலைகள் நேரடியாக மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தவிர்த்துக் கொண்டுள்ளன.
தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்களுக்கு நிகழ்நிலை தொழில்நுட்பம் மூலம் ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் வரையில் எவ்வாறான அடிப்படையில் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பது குறித்து அநேகமான பாடசாலை சபைகள் தங்களது திட்டங்களை முன்வைத்துள்ளன.
இந்த தொழிற்சங்கப் போராட்டம் சட்டவிரோதமானது என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளதுடன் தங்களது பேரம் பேசும் உரிமைகளை முடக்கும் வகையிலான நடவடிக்கைகளை ஏற்க முடியாது என தொழிற்சங்கங்கள் பதிலளித்துள்ளன.