அமெரிக்காவில் பாடசாலைக்குள் நடந்த துப்பாக்கிப் பிரயோகம்

Independent Writer
Report this article
அமெரிக்காவில் பாடசாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லபட்டதுடன் பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவில் பாடசாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நாக்ஸ்வில்லே நகரில் உயர்நிலை பாடசாலை ஒன்று உள்ளது. குறித்த பாடசாலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
அப்போது பாடசாலைக்குள் திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. இதனிடையே அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் உடனடியாக பாடசாலைக்குள் விரைந்தார்.
அப்போது பாடசாலைக்குள் உள்ள ஒரு அறையில் ஆண் ஒருவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகில் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நின்றுக்கொண்டிருந்தார். பொலிஸ் அதிகாரி அந்த நபரிடம் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்து விடும்படியும் எச்சரித்தார்.
ஆனால் அதற்கு செவி சாய்க்காத அந்த நபர் பொலிஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதற்கிடையில் துப்பாக்கி சூடு குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் பாடசாலையை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் துப்பாக்கி சூடு நடத்திய அந்த மர்ம நபரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
குறித்த துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.