சர்வதேச மாநாடு ஒன்றில் ரஷ்ய - உக்ரைன் எம்.பிக்களிடையே ஏற்பட்ட கைகலப்பு!
துருக்கி நாட்டில் இடம்பெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (PABSEC) நாடாளுமன்றப் பிரதிநிதிகள் மாநாட்டில் இடம்பெற்றது.
குறித்த மாநாட்டின் ஆரம்ப நாளான நேற்றைய தினம் (04-05-2023) ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான ஒல்கா திமோபீவா நேர்காணல் ஒன்றில் பங்குபற்றியபோது, அவருக்குப் பின்னால் உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒலெக்ஸாண்டர் மரிகோவிஸ்கி, உக்ரைன் தேசியக் கொடியை விரித்துப் பிடித்தார்.
இதையடுத்து ஒலெக்ஸாண்டர் மரிகோவிஸ்கியின் கையிலிருந்து உக்ரைன் கொடியை மற்றொரு ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான வெலேறி ஸ்டாவிட்ஸ்கி பறித்தார்.
அதன்பின் இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதன் போது இவ்விருவரையும் அங்கிருந்தவர்கள் பிரித்தனர்.
மேலும் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டாவிட்ஸ்கி, மருத்துவ சோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.