விண்வெளியில் மர்ம நிகழ்வுகள்? வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
வேற்று கிரகவாசிகள் தொடர்புடைய பறக்கும் தட்டுகள் (யுஎஃப்ஓ) குறித்த புதிய ரகசிய ஆவணங்களை அமெரிக்க பாதுகாப்புத் துறை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடத் தொடங்கியுள்ளது.
முந்தைய நிர்வாகங்கள் தகவல்களை மறைக்க முயன்றதாகக் கூறப்படும் நிலையில், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விவகாரத்தில் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த விரும்புவதாகவும், பொதுமக்கள் தங்களின் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பதே நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை மட்டுமின்றி வெள்ளை மாளிகை, தேசிய புலனாய்வு இயக்குநர் அலுவலகம், எரிசக்தித் துறை, நாசா மற்றும் எஃப்பிஐ உள்ளிட்ட அமைப்புகளும் இணைந்துள்ளன.
இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக இணையதளத்தில் முதல் கட்டமாக 162 ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வெளியிடப்பட்ட ஆவணங்களில் நாசாவின் விண்வெளி பயண பதிவுகள், பழைய அரசுத் துறை தகவல்கள் மற்றும் எஃப்பிஐ விசாரணை அறிக்கைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக 1972ஆம் ஆண்டு நடைபெற்ற ‘அப்போலோ 17’ நிலவு பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் முக்கோண வடிவில் மூன்று ஒளிப்புள்ளிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2023 செப்டம்பரில் ட்ரோன் பைலட் ஒருவரிடம் எஃப்பிஐ நடத்திய விசாரணை அறிக்கையும் வெளியாகியுள்ளது.
அதில், வானில் மிகவும் பிரகாசமான ஒளியுடன் ஒரு மர்ம பொருள் தோன்றியதாகவும், சில விநாடிகளில் திடீரென மறைந்துவிட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
முன்னதாக 2022ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றம் யுஎஃப்ஓ தொடர்பான ஆவணங்களை வெளியிடுமாறு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், கடந்த பிப்ரவரியில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரம் இதுவரை காணப்படவில்லை என கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், வேற்று கிரக தொழில்நுட்பம் மீட்கப்பட்டதாகவும், வேற்று கிரகவாசிகளின் இருப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் 2024 அறிக்கை திட்டவட்டமாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
யுஎஃப்ஓ தொடர்பான இந்த புதிய ஆவண வெளியீடு உலகளாவிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.