அவுஸ்திரேலியாவில் ஐபோன் வடிவிலான இரகசிய துப்பாக்கிகள் பறிமுதல்
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு வடக்கே உள்ள டிசெப்ஷன் பே பகுதியில் காவல்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது, ஐபோன் (iPhone) போன்று மடித்து வைக்கக்கூடிய இரண்டு விசித்திரமான இரகசிய கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அண்மையில், குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் மோர்ட்டன் தந்திரோபாய குற்றத்தடுப்புப் பிரிவினர், பொது பாதுகாப்புப் படையினர் மற்றும் மோப்ப நாய்ப் பிரிவினருடன் இணைந்து இந்த சோதனையை முன்னெடுத்தனர்.

இதன்போது, கைபேசி போன்ற தோற்றமளிக்கும் இரு துப்பாக்கிகள் உட்பட மொத்தம் நான்கு கைத்துப்பாக்கிகள் மற்றும் பல தோட்டாக்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
தூரத்தில் இருந்து பார்க்கும்போது ஐபோன் போன்று காட்சி அளிக்கும் வகையில் இந்த துப்பாக்கிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த சோதனையின் போது பல வகையான போதைப்பொருட்களும், திருடப்பட்ட உந்துருளியொன்று ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.