ரஷ்யாவில் கண்ணுக்குள் முளைத்த மரத்தின் விதை ; மருத்துவர்கள் அதிர்ச்சி
ரஷ்யாவில் நபர் ஒருவரின் கண்ணுக்குள் மரத்தின் விதை ஒன்று முளைத்து வேர்விட்டிருந்த அதிர்ச்சிகரமான சம்பவம் மருத்துவப் பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் சைபீரியப் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய மேக்ஸிம் ஸ்லெப்சோவ் (Maxim Sleptsov) என்ற வெல்டிங் மற்றும் பிளம்பிங் தொழிலாளியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாகக் கடுமையான தலைவலி, கண் எரிச்சல் மற்றும் பார்வைக் குறைபாடு ஆகியவற்றால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் சைபீரியாவின் தொலைதூரப் பகுதிக்குச் சென்றிருந்தபோது, மரக்கிளை ஒன்று எதிர்பாராத விதமாக அவரது கண்ணில் பலமாக மோதியுள்ளது.
இதனால் கண்ணில் தூசி அல்லது சிறிய துகள்கள் விழுந்திருக்கலாம் எனக் கருதிய அவர், அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
எனினும், மரக்கிளையிலிருந்து தெறித்த மிகச்சிறிய விதை ஒன்று அவரது கண்ணுக்குள் சிக்கியிருந்தமை பின்னர் தெரியவந்துள்ளது.
கண்ணிலிருந்த ஈரப்பதத்தின் காரணமாக அந்த விதை மெல்ல முளைத்து வளரத் தொடங்கியுள்ளது.
இதனால் சுமார் நான்கு மாதங்களாக அவர் தொடர்ச்சியான தலைவலி மற்றும் பார்வைக் கோளாறுகளால் அவதிப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, யாகுட்ஸ்க் நகரிலுள்ள அவசர மருத்துவமனைக்குச் சென்ற அவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில், அவரது கண்ணின் விழி வெண்படலப் பகுதியில் மர விதை முளைத்து, சுமார் 3 மில்லிமீற்றர் அளவுக்கு வேர்களைப் பரப்பியிருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவக் குழுவினர் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
மயக்க மருந்து செலுத்தப்பட்ட பின்னர், சிறப்பு ஊசியின் உதவியுடன் கண்ணுக்குள் முளைத்திருந்த விதையையும் அதன் வேர்களையும் மிகுந்த அவதானத்துடன் அகற்றியுள்ளனர்.
சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் காரணமாக மேக்ஸிமின் பார்வை பாதிப்பின்றிப் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், அவரை நீண்டகாலமாகத் தொந்தரவு செய்து வந்த தலைவலியும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நீங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சிறிய மர விதை மனிதக் கண்ணுக்குள் முளைத்து வேர்விட்ட இந்தச் சம்பவம் மருத்துவ உலகிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.