மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த தாய்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் பேஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ள தனது மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த குற்றத்திற்காக சோனியா லார்சன் என்பவருக்கு 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத் தண்டனையுடன் இரண்டு ஆண்டுகள் கண்காணிப்புப் பிணை மற்றும் 60 மணி நேரச் சமூக சேவையும் அவருக்கு தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 17, 2023 அன்று 'தி ஹப் ஆன் தி டாக்ஸ்'உணவகத்தில் ஏற்பட்ட பெருந்தீயில் கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்தது. இதனால் சுமார் 1.7 மில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது.

அக்டோபர் 13 மற்றும் 16 ஆகிய திகதிகளிலும் சோனியா உணவகத்திற்குள் புகுந்து தீ வைக்க முயன்றது கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தெரியவந்தது.
அக்டோபர் 17 ம் திகதி பாதுகாப்பு அலாரம் அமைப்பை முடக்கிவிட்டு திட்டமிட்டுத் தீ வைத்துள்ளார். திட்டமிட்டு இந்தத் தீவைப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது, இது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று நீதிபதி டி.ஜி. மெக்டொனால்ட் சுட்டிக்காட்டினார்.
சோனியா இதற்கான தெளிவான காரணத்தைக் கூறவில்லை என்றாலும், அந்தச் சமயத்தில் தான் மனதளவில் கடுமையான பின்னடைவைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட உணவகத்தின் உரிமையாளரும் சோனியாவின் மகனுமான கெவின் லார்சன், காப்பீட்டுத் தொகை போகத் தான் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இழந்துவிட்டதாகவும், வணிகத்தை மீண்டும் தொடங்க முடியாமல் போய்விட்டது என்றும் தெரிவித்தார்.
எனினும், தனது தாயை மன்னித்து அவருடனான உறவை மீண்டும் புதுப்பிக்க விரும்புவதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.