நெருக்கமாக பழகியவர்களை விஷம் கொடுத்து கொல்லும் சார்லஸ் சோப்ராஜ் விடுதலை
நேபாள சிறையில் இருந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு சீரியல் கில்லரான சார்லஸ் சோப்ராஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு நாடுகளின் கடவுச்சீட்டை கைவசம் வைத்துள்ள சார்லஸ் சோப்ராஜ் தொடர்பில், அவரது உண்மையான கடவுச்சீட்டு எதுவென கண்டறிந்த பின்னர், உரிய நாட்டுக்கு நாடுகடத்தப்படுவார் எனவும் கூறப்படுகிறது.
சார்லஸ் சோப்ராஜ் பிரான்ஸ் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த வியட்நாமில் பிறந்தவர். இவரது தந்தை பவ்னானி, இந்தியர். தாய் டிரான் லோவாங் புன், வியட்நாமிய பெண். இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தவர்கள் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், சார்லஸ் சோப்ராஜ் ஹிப்பி எனப்படும் நாடோடி கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு அதிகமாக பயணங்களை மேற்கொண்டுள்ளார். மட்டுமின்றி பயணங்களின்போது தன்னுடன் நெருக்கமாக பழகியவர்களை அவர் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.
1970களில் ஆப்கானிஸ்தான், இந்தியா, தாய்லாந்து, துருக்கி, நேபாளம், ஈரான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் குறைந்தது 20 பேரை இவர் கொன்றதாக நம்பப்படுகிறது. இவர் மீதுள்ள கொலைக் குற்றங்கள் எண்ணிக்கை 30-ஐ கடந்தாலும் கூட 12 கொலைகள்தான் இவர் செய்ததாக இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளது.