பெல்ஜியத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் பலர் பலி
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரின் மையப்பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு பிரம்மாண்ட வானளாவிய கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிப் பலர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டிடத்தில் ஏற்பட்ட தீயைத் தீயணைப்பு வீரர்கள் விரைவாக அணைத்த போதிலும், புகை மற்றும் தீ கட்டிடத்தின் மின் தூக்கி வழிகளில் (Lift shafts) வேகமாகப் பரவியுள்ளது.
இதனால் இரண்டு மின் தூக்கிகள் (Lifts) நடுவழியிலேயே சிக்கிக் கொண்டன. தீயணைப்புத் துறையினர் ஒரு மின் தூக்கியின் கதவை உடைத்துப் பார்த்தபோது, அதனுள் பலர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மின் தூக்கியின் உள்ளே பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன, ஆனால் சரியாக எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று இப்போது கூற முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குப் பின் காணாமல் போனதாகக் கூறப்படும் 6 நபர்களின் உடல்களாக இவை இருக்கலாம். ஆனால், மற்றொரு மின் தூக்கியிலோ அல்லது கட்டிடத்தின் வேறு பகுதியிலோ மேலும் சிலர் சிக்கியிருக்கவும் வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
கட்டிடம் முழுவதும் இடிபாடுகள் நிறைந்துள்ளதால் மீட்புப் பணி மிகவும் சவாலாக உள்ளது. உடல்களை மீட்க இன்னும் பல மணிநேரம் ஆகும்," என தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மீட்புப் பணியின் போது அதிக வெப்பம் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஒரு தீயணைப்பு வீரருக்கும் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.