பிரான்ஸில் கடும் வெப்பநிலையுடன் பயங்கர காட்டுத் தீ; பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
பிரான்ஸின் தெற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்பெயின் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள பிரெஞ்சு பைரினீஸ் மலை அடிவாரத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட மக்களை உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

4,600 ஹெக்டயருக்கும் அதிகமான பரப்பளவைச் சாம்பலாக்கியுள்ளது
பெர்பிக்னான் நகருக்கு அருகிலுள்ள ட்ரெவிலாக் பகுதியில் பரவியுள்ள இந்த காட்டுத்தீ, இதுவரை 4,600 ஹெக்டயருக்கும் (11,366 ஏக்கர்) அதிகமான பரப்பளவைச் சாம்பலாக்கியுள்ளது.
பலத்த காற்று வீசி வருவதன் காரணமாகக் காட்டுத்தீ குடியிருப்புப் பகுதிகளை நோக்கி மிக அதிவேகமாகப் பரவி வருவதாக உள்நாட்டு மக்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசர உதவித் திட்டத்தின் கீழ் சைப்ரஸ் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் இருந்து 4 விசேட விமானங்கள் பிரான்சுக்கு அனுப்பப்படவுள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் அறிவித்துள்ளார்.
ஸ்பெயினிலும் இந்தக் காட்டுத்தீயின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஸ்பெயினின் 'லெஸ் காவாரெஸ்' இயற்கை வலயத்தில் சுமார் 2,200 ஹெக்டயர் நிலப்பரப்பு தீயினால் அழிக்கப்பட்டுள்ளதுடன், கஸ்டலன் மாகாணத்தில் உள்ள தேசிய பூங்கா பகுதிக்குள் தீ பரவியதை அடுத்து 500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவாக, உலகிலேயே ஐரோப்பா கண்டம் தான் உலகளாவிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிவேகமாக வெப்பமடைந்து வருவதாகக் கோப்பர்நிக்கஸ் காலநிலை சேவை அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்தக் கடுமையான வெப்ப அலையின் காரணமாக ஏற்கனவே பிரான்சில் 2,025 பேரும், பெல்ஜியத்தில் 1,222 பேரும், நெதர்லாந்தில் 480 பேரும் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாரத்திலும் பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வெப்பநிலை 40°C ஐத் தாண்டும் என வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.