கனடாவின் சில பகுதிகளில் மீண்டும் கடும் புயல் எச்சரிக்கை!
கனடாவின் மொன்றியால் மற்றும் லாவல் ஆகிய பகுதிகள், தொடர்ச்சியாக இரண்டாவது வார இறுதியிலும் கடுமையான இடியுடன் கூடிய புயல் எச்சரிக்கை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இன்று காலை முதலே இப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, கனடா சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைப்பு (ECCC), மொன்றியால், லாவல் மற்றும் வோட்ராய் (Vaudreuil) ஆகிய பகுதிகளுக்கு 'மஞ்சள் நிற' எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) மதியம் மற்றும் மாலை வேளைகளில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும். அத்துடன் கடுமையான இடியுடன் கூடிய ஆபத்தான புயல் உருவாக சாதகமான சூழல் நிலவுகிறது என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த புயல் மற்றும் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட மழை காரணமாக, சில பகுதிகளில் மிக அதிகளவிலான மழைப்பொழிவு பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகளில் திடீரென கடுமையான காற்று வீசக்கூடும் என்பதால், படகு சவாரி போன்ற நீர் சார்ந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகள் ஆபத்தானதாக மாறக்கூடும். பலத்த காற்றினால் வீடுகளின் கூரைகள், வேலிகள், மரங்கள் மற்றும் தற்காலிகக் கூடாரங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது.
கடந்த வாரம் வீசிய கடுமையான புயலின் போது, 'ஹைட்ரோ-கியூபெக்' (Hydro-Quebec) நிறுவனத்தின் 75,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரமின்றி தவித்தனர். அதேபோன்ற மின் தடைகள் இந்த வாரமும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.