கனடாவில் தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சந்தேகநபர் கைது
கனடாவில் மிசிசாகா நகரில் கடந்த 2024 அக்டோபர் முதல் 2025 ஏப்ரல் மாதம் வரை இடம்பெற்ற பல பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக, பீல் பிராந்திய காவல்துறை ஒரு சந்தேகநபரை கைது செய்துள்ளது.
2024 அக்டோபர் 6ஆம் திகதி இரவு 9 மணியளவில், மொனிக்கா டிரைவ் பகுதியில் ஒரு தங்கதனமாக வந்த 30வயது பெண்ணை ஒரு சைக்கிளில் வந்த ஆண் தொடர்ந்துவந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
2025 மார்ச் 24ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில், ரெட்ஸ்டோன் ரோடு மற்றும் ஹோம் சைட் கார்டன்ஸ் பகுதியில் மேலும் ஒரு 30 வயதுப் பெண்ணை கறுப்புச் சடானில் வந்த ஒருவர் தொடர்ந்துவந்து, அவளிடம் பாலியல் வன்கொடுமை நடத்தியதாக கூறப்படுகிறது.
2025 ஏப்ரல் 2ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில், ரெட்ஸ்டோன் மற்றும் நெதர்வுட் சாலைகளின் சந்திப்பில், குறித்த சந்தேகநபர் ஒரு இளம்பெண்ணை கறுப்பு காரில் இழுத்துச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஏப்ரல் 4ஆம் திகதி, மிசிசாகாவை சேர்ந்த 26 வயதான ரிக் ஜூனியர் ஆர்சன் (Rick Junior Arson), என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 தடவைகள் பாலியல் வன்கொடுமை, மரணம் அல்லது உடல் காயம் ஏற்படுத்துவதாக மிரட்டல் விடுத்தல், கடத்தல் (ஒருவரை தடுத்து வைக்கும் நோக்கத்துடன்) மற்றும் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
காவல்துறையினரின் தகவலின்படி, 2023 ஏப்ரலில் ஒன்டாரியோவில் உள்ள டிமின்ஸில் இடம்பெற்ற இத்தகைய சம்பவங்களுக்காக ஆர்சன் மீது ஏற்கனவே வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அந்த வழக்குகளில் அவர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தண்டனை விதிக்கபடும் நிலைமையில் உள்ளார்.