பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன்; ட்ரம்ப், மக்ஸ் வரிசையில் பில் கேட்ஸ்
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, அமெரிக்க நீதித்துறை சுமார் 3.5 மில்லியன் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை நேற்று வெளியிட்டிருந்தது.
இந் நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட உலகின் பல செல்வாக்குமிக்க மனிதர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட சில பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்கள் எப்.பி.ஐ (FBI) அறிக்கையில் உள்ளன.

வெற்றுப் முறைப்பாடுகள்
எனினும், இவை 2020 தேர்தலுக்கு முன்னதாக ஆதாரமற்ற முறையில் சமர்ப்பிக்கப்பட்ட "வெற்றுப் முறைப்பாடுகள்" என்றும், இவற்றில் உண்மையில்லை என்றும் அமெரிக்க நீதித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
ட்ரம்ப் இக்குற்றச்சாட்டுகளை நீண்டகாலமாக மறுத்து வருகின்றார். இந்தநிலையில், எப்ஸ்டீன் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில், பில் கேட்ஸ் ரஷ்யப் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதற்குத் தான் உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பில் கேட்ஸ் தரப்பு இந்தத் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என மறுத்துள்ளது.
அத்தோடு, முன்னாள் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, எப்ஸ்டீனை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு விருந்துக்கு அழைத்ததும், அங்கு தனிப்பட்ட முறையில் சந்திப்புகளை நடத்தியதும் மின்னஞ்சல்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
பில்லியனர் ரிச்சர்ட் பிரான்சன் எப்ஸ்டீனுடன் நட்பாக இருந்ததும், தற்போதைய அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லட்னிக் எப்ஸ்டீனின் தீவில் மதிய உணவு உண்ணத் திட்டமிட்டிருந்ததும் கோப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த ஆவணங்களில் பெயர்கள் இடம்பெற்றிருப்பது அவர்கள் குற்றமிழைத்தார்கள் என்பதற்கான ஆதாரம் அல்ல என அதிகாரிகள் தெரிவித்தாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.