Sheffield துப்பாக்கி சூடு; மூவர் கைது
இங்கிலாந்து ஷெஃபீல்ட் (Sheffield) நகர மையத்தில் அமைந்துள்ள ஒரு மதுபான விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காவல்துறை அதிகாரிகள் மூன்று நபர்களை கைது செய்துள்ளனர்.
நகரத்தின் வெஸ்ட் தெருவில் உள்ள ஒரு பிரபலமான மதுபான விடுதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 2.45 மணிக்குத் தங்களது அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தெற்கு யார்க்ஷயர் (South Yorkshire) காவல்துறை தெரிவித்தது.

30 வயதுப் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே கண்டெடுக்கப்பட்டு அவருக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கொலைச் சந்தேகத்தின் பேரில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை மாலை தெற்கு யார்க்ஷயர் காவல்துறை தெரிவித்தது.